search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார் எண்"

    • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்
    • தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜனவரி மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந்தேதி காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

    விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். மேலும் பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள தவணைத்தொகையினை பெறும் வகையில் அனைவரும் கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் இ-கே.ஒய்.சி. எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்கவேண்டும்.
    • வாக்காளர் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6 பி-யில் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    இந்திய தேர்தல் ஆணையம் 29.5.2023 அன்று, 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தங்களை மேற்கொள்வதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி வெளியிடப்படுகிறது. ஏற்கனவே 17-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதில் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்க அடுத்த மாதம் 27-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு முகாம்கள் வருகிற நவம்பர் மாதம் 4, 5, 18, 19-ந்தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

    திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதற்கான தீர்வு வருகிற டிசம்பர் மாதம் 26-ந்தேதி வெளியிடப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 5-ந்தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது.

    மேற்சொன்ன நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலங்களிலும், சிறப்பு முகாம் நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும், அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடமும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்கவேண்டும். 25 வயதுக்கு கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைப்பேசி செயலி மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    1.1.2024, 1.4.2024, 1.7.2024, 1.10.2024 ஆகிய தேதிகளில் 18 வயதை பூர்த்தி அடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

    வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ-வை நேரில் அளிக்க வேண்டும் அல்லது அதிகாரிக்கு தபாலில் படிவத்தை அனுப்பலாம். வாக்காளர் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6 பி-யில் விண்ணப்பிக்கலாம்.

    அதேபோல், நபரின் பெயரை சேர்க்க ஆட்சேபனைக்கான வாக்காளர் விண்ணப்பப் படிவம், வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள பெயரை நீக்குதல் ஆகியவற்றுக்கு படிவம் 7-ல் விண்ணப்பிக்க வேண்டும்.

    வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால், குடியிருப்பை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்றுதல், நடப்பு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்தல், மாற்றுத்திறனாளிகளை குறிப்பது, மாற்று புகைப்பட அடையாள அட்டை பெறுவது ஆகியவற்று படிவம் 8-ல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

    • வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
    • இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5-ந் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறுகிறது. அந்த காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வு செய்யப்படும்.

    அதன் பின்னர் வரும் ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கும் நாளன்று, சரிபார்ப்புக்கு வசதியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் வரும் அக்டோபர் 17-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-

    தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியாக அறிவிக்கப்பட்ட வரும் அக்டோபர் 17-ந் தேதிக்கு பதிலாக அக்டோபர் 27-ந் தேதி வெளியிடப்படும். இதற்கான அட்டவணையை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் அன்றைய தினம் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளும் தொடங்கும்.

    அதன்படி, அக்டோபர் 27-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

    இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், டிசம்பர் 26-ந் தேதி வரை பரிசீலிக்கப்படும். அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5-ந் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.

    வாக்காளர் பட்டியல் திருத்த காலகட்டத்தில் ஆதார் இணைப்புக்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். பல மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள் ஆதார் இணைப்புக்கான முகாம்களை நடத்துகின்றனர். ஆனால் நகர்ப்புறங்களில் ஆதார் இணைப்பு குறைவாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது.
    • முதற்கட்டமாக பட்டா, நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைன் வாயிலாக வழங்கும் பணி செயல்பாட்டில் உள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றவும், ஆதார் பான் உள்ளிட்ட தகவல்களை அதனுடன் இணைக்கவும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

    இதற்கான வழிகாட்டுதல்களையும் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்து செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது.

    முதற்கட்டமாக பட்டா, நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைன் வாயிலாக வழங்கும் பணி செயல்பாட்டில் உள்ளது.

    இதையடுத்து இப்போது பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில் உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நில அளவை மற்றும் வருவாய்த் துறை முடிவு செய்துள்ளது.

    ஏனென்றால் பட்டாவில் தற்போது இடம் பெறும் விவரங்கள் உரிமையாளர் குறித்த அடையாளத்தை உறுதி செய்ய தற்போதைய ஆவணங்களில் போதுமானதாக இல்லை.

    எனவே பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒருவர் பெயரில் எத்தனை சொத்துக்கள் உள்ளது என்பதை அரசு சார்ந்த துறைகள் தெரிந்து கொள்ள இது உதவும் என்றும் நில அபகரிப்பு போன்ற மோசடிகளை தடுக்க இந்த புதிய முறை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். இதுபற்றி சர்வே தீர்வுத் துறை இயக்குனர் மதுசூதனன் கூறியதாவது:-

    நில பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் ஆவணங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதை நோக்கமாக கொண்டு இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    தற்போதைய நிலையில் வெறும் ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளதால் ஒருவர் தன்னைத் தானே சட்டபூர்வ நில உரிமையாளராக காட்டிக் கொள்ள முடியும்.

    அதனால்தான் இதை தடுக்கும் வகையில் கணினி மயமாக்கப்பட்ட நிலப்பதிவோடு ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் உண்மையான உரிமையாளர்கள் மட்டுமே பத்திரப்பதிவு பரிவர்த்தனைகளை மேற் கொள்வதை உறுதி செய்ய முடியும். மாநில அரசின் இந்த முன்மொழிவுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் ஒப்புதல் அளித்ததையடுத்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாட்டில் உள்ள 130 கோடி மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைத்து விட்டனர்.
    • ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மேலும் அவகாசம் கொடுக்கப்படுமா என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரையில் எவ்வித அறிவிப்பும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை.

    சென்னை:

    ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் உள்ள மக்களின் வங்கி பணவர்த்தனை நடவடிக்கைகள், சொத்து விவரங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இதனை இணைக்க வலியுறுத்தியது.

    சாமான்ய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை ஒட்டுமொத்த இந்திய மக்களின் புள்ளி விவரங்களை சேகரிக்கும் வகையில் பான்-ஆதார் இணைப்பு கருதப்படுகிறது. கடந்த 2 வருடத்திற்கு மேலாக பொதுமக்களை வலியுறுத்தி வந்த நிலையில் 3 முறை நீட்டிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.

    முதலில் ஒரு வருடத்திற்குள் இணைக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்னர் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரூ.500 அபராதத்துடன் இணைக்க மார்ச் 31-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

    அதன்பின்னர் இணைப்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூன் 30-ந்தேதிக்குள் பான்-ஆதாரை இணைக்க இறுதி கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் நேற்றுடன் அவை முடிந்தது.

    நாட்டில் உள்ள 130 கோடி மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைத்து விட்டனர். கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் குறிப்பிட்ட அளவில் இணைக்கவில்லை. வங்கி நடைமுறையை பின்பற்றாதவர்கள் தான் அதிகளவில் இணைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மேலும் அவகாசம் கொடுக்கப்படுமா என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரையில் எவ்வித அறிவிப்பும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. இதுகுறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி தான் வெளியிட வேண்டும். இன்னும் குறிப்பிட்ட அளவிலான சதவிகிதத்தினர் இணைக்காததால் மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து வங்கி உயர் அதிகாரிகள் கூறும்போது, பானுடன் ஆதார் எண்ணை இன்னும் பலர் இணைக்காமல் உள்ளனர். இது முழுக்க முழுக்க வங்கி பணியை சார்ந்ததாகும். ஒருவருக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது. புதிதாக வாங்குவது போன்ற விவரங்கள் ஆதார் மூலம் தெரியவந்து விடும். வங்கியில் பணம், காசோலை பரிவர்த்தனை விவரங்கள் பான் கார்டு மூலம் தெரியும். இந்த இரண்டையும் இணைத்து விட்டால் ஒட்டுமொத்த ஒருவரது சொத்து, பண பரிவர்த்தனை தெரிந்து விடும்.

    அதனால் சிலர் இணைக்காமல் உள்ளனர். ஒருசிலர் அறியாமையால் இணைக்கவில்லை. இணைக்காதவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி தான் முடிவு செய்யும். இதுபற்றிய அறிவிப்பு ஓரிரு நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கிறோம், என்றனர்.

    • ரூ.2000/- நிதியானது ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • அஞ்சல் அலுவலகத்திலும், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்.

    விழுப்புரம்:

    பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா மூலம் ரூ.2000/- நிதியானது ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது மத்திய அரசு 14-வது தவணைத் தொகை விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி ஜூலை மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணை தொகைகளும் பயனாளிகளின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் அலுவலகத்திலும், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் ஆதார் எண்ணை பதிவு செய்து மற்றும் ஆதார் கார்டில் முகவரி மாற்றம், செல்போன் எண் இணைத்தல் போன்ற அனைத்து பணிகளையும் செய்து தர உள்ளனர். எனவே விவசாயிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆதார் எண்ணை பதிவு செய்து பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் விவசாய நிதி உதவித்தொகை விவ சாயிகளுக்கு வங்கிக்க ணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
    • மத்திய அரசு வரும் ஜூலை மாதத்தில் 14-வது தவணை நிதியை விவசாயிகள் பெறுவதற்கு ஒரு அறிவிப்பை வெளி யிட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்கு னர் ராதாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் விவசாய நிதி உதவித்தொகை விவ சாயிகளுக்கு வங்கிக்க ணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு வரும் ஜூலை மாதத்தில் 14-வது தவணை நிதியை விவசாயிகள் பெறுவதற்கு ஒரு அறிவிப்பை வெளி யிட்டுள்ளது.

    அதன்படி, இதுவரை தங்களுடைய சரியான ஆதார் எண்ணை இணைக்காத, ஆதார் விடுபட்டுப்போன பிரதம மந்திரி கிசான் திட்ட விவசாயிகள் வருகிற 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவ லகத்தில் தபால்துறை அலுவலர்களால் நடத்தப்ப டும் சிறப்பு முகாமிற்கு விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை, ஆதார் அட்டை யுடன் இணைக்கப்பட்ட செல்போன், முகவரி மாற்றம் இருப்பின் அதற்கான சான்று ஆகிய வற்றுடன் நேரில் வந்து விவசாயிகள் தங்களது விபரங்களை சரி பார்த்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • இந்திய தேர்தல் கமிஷன் அளித்த கால அவகாசம் கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
    • 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர் உள்ளனர்.

    தாராபுரம் :

    வாக்காளர் பட்டியலை முறைப்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் கமிஷன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் முதல் வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு தொடங்கியது.

    'Voter Help Line' செயலி, nvsp.in என்கிற தேர்தல் கமிஷன் இணையதளம் வாயிலாக ஆதார் எண் இணைக்க வழிவகை செய்யப்பட்டது. வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்றபோது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் விவரங்களை பெற்றனர். ஆதார் இணைப்புக்கு இந்திய தேர்தல் கமிஷன் அளித்த கால அவகாசம் கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர் உள்ளனர். இவர்களில் இதுவரை 55.84 சதவீதம் பேர் அதாவது 12 லட்சத்து 90 ஆயிரத்து 837 பேர் மட்டுமே ஆதார் எண் இணைத்துள்ளனர்.வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பில் 36.13 சதவீதத்துடன் திருப்பூர் வடக்கு தொகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர் 3.84 லட்சம் பேரில் 1.38 லட்சம் பேர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர். பல்லடம் தொகுதியில் 52.13 சதவீதம் பேர், திருப்பூர் தெற்கில் 53.80 சதவீதம் பேர் ஆதார் இணைத்துள்ளனர். ஆதார் இணைப்பு விகிதத்தில் மடத்துக்குளம், உடுமலை தொகுதிகள் முந்துகின்றன.

    2.29 லட்சம் வாக்காளரில் 1.58 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இதனால் 69.04 சதவீதத்துடன் ஆதார் இணைப்பில் மடத்துக்குளம் முன்னிலை வகிக்கிறது. உடுமலையில் 63.21 சதவீதம், தாராபுரத்தில் 62.68,அவிநாசியில் 61.47, காங்கயத்தில் 60.76 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.போலிகளை களைந்து செம்மையான வாக்காளர் பட்டியல் உருவாக வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு மிகவும் அவசியமாகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் மொத்த வாக்காளரில் 44 சதவீதம் அதாவது 10.20 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண் இணைக்கவி ல்லை. தேர்தல் கமிஷன், ஆதார் இணைப்புக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தி 100 சதவீத ஆதார் இணைப்பை எட்ட செய்யவேண்டும் என்பது பெரும்பாலான அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 99 சதவீதத்துக்கும் மேல் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மின் இணைப்பு தொடர்பாக தவறான கருத்து பதியப்பட்டு பரவி வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 99 சதவீதத்துக்கும் மேல் வீடு, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களில் சமூக வலைதளங்களில், ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து பதியப்பட்டு பரவி வருகிறது. இந்த கருத்து முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது ஆகும்.

    தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 9-9-2022 அன்று வெளியிட்ட வீதப்பட்டியலில் மாற்ற ஆணையின் சரத்துக்களின்படி, கள ஆய்வின் அடிப்படையில் ஒரே வீட்டில், குடியிருப்பில், ஒரே நபரின் பெயரில், ஒரு குடும்பத்தினரே உபயோகிக்கும் ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைக்க அல்லது அத்தகைய கூடுதல் மின் இணைப்புகளை பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், சில நிர்வாக காரணங்களால் மேற்படி ஒன்றிணைப்பு, வீதப்பட்டியல் மாற்றும் பணி தொடங்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

    எனவே, இது தொடர்பான எந்த ஒரு செயல் உத்தரவும் மின் பகிர்மான வட்டங்களில் உள்ள பிரிவு அலுவலகங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. எனினும் இக்குறிப்பிட்ட கள ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரிவு அலுவலரின் கடித வரைவு செயல், ஒரு தனிப்பட்ட நிகழ்வு ஆகும். இதில் சம்பந்தப்பட்ட அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் இதுவரை 2.66 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளது.
    • தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 6 ஆயிரம் மெகாவாட் தயாரிப்பிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    கரூர்:

    தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.

    அதாவது தமிழ்நாடு முழுக்க அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மின் நுகர்வோர் குறித்து உரிய தரவுகள் இல்லாததால் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்களை இணைக்கும் பணிகளை தமிழ்நாடு மின்வாரியம் தொடங்கியது.

    தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை பெற ஆதார் இணைப்பு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மின்சார கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்தவும் ஆதார் மின் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

    அதன்படி, கடந்தாண்டு நவம்பர் 15-ந்தேதி முதல் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. இதற்காகச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆதார் மின் இணைப்பு பணிகள் நடைபெற்றன. முதலில் டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதுவே பிப்ரவரி 15-ந்தேதி வரை முதலில் நீட்டிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு பிப்ரவரி 28-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பெரும்பாலானோர் தங்கள் ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துவிட்ட போதிலும், இன்னும் சிலர் இணைக்காமல் இருந்தனர்.

    இன்றே ஆதார் மின் இணைப்பு எண்ணை இணைக்கக் கடைசி நாள் என்பதால் இதுவரை ஆதாரை மின் இணைப்பை இணைக்காதவர்கள் இணைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இனிமேல் ஆதாருடன் மின் இணைப்பை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தரும் இளைஞர் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். மேலும் மார்ச் 4-ந்தேதி நடைபெறும் அரசு விழாவில் ரூ.267 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 12 லட்சம் மரக்கன்றுகளை நடும் விழாவையும் தொடங்கி வைக்கிறார். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

    இதுவரை தமிழகத்தில் 2.66 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 1.50 லட்சம் இணைப்புகளை இணைக்க வேண்டிய உள்ளது. இன்று மாலையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கான கால அவகாசம் நிறைவடைகிறது.

    மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்காக ஏற்கனவே பலமுறை மக்களின் விருப்பத்தின் பேரிலும், வேண்டுகோளின் அடிப்படையிலும் அவகாசம் கொடுக்கப்பட்டதால் கூடுதல் அவகாசம் இனிமேல் தரப்படாது. எனவே இன்று மாலைக்குள் தங்களது மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள், விரைந்து ஆதார் எண்களை இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    குறுகிய காலத்தில் 2.66 கோடி பயனாளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஏற்கனவே இருந்த சிறு சிறு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் வாயிலாக மின் சேவைகளுக்கான பயன்பாட்டில் எந்த குறைபாடும் இருக்காது.

    சூரிய மின்சக்தியில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக நேற்று அதிகபட்சமாக சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 6 ஆயிரம் மெகாவாட் தயாரிப்பிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூரில் முதல் சூரிய மின் உற்பத்தி பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரும்பாலான மாவட்டங்களில் ஆதார் எண் இணைப்பில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    • வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்க நாளை முதல் 2 நாட்கள் வீடு வீடாக ஆய்வு பணி நடைபெற உள்ளது.

    திண்டுக்கல்:

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருகிறது. வாக்காளர்கள் இடம் மாறி செல்லும்போது பழைய இடத்தில் உள்ள வாக்குரிமையை நீக்காமல் புதிதாக விண்ணப்பித்து பட்டியலில் சேர்ந்து விடுகின்றனர்.

    இதனால் இரட்டை வாக்குரிமை பெறும் சூழல் உள்ளது. இது போன்ற இரட்டைப்பதிவை நீக்குவதற்கு வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்து சரிபார்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    இருந்தபோதும் பெரும்பாலான மாவட்டங்களில் ஆதார் எண் இணைப்பில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 38 லட்சத்து 66 ஆயிரத்து 626 வாக்காளர்கள் கொண்ட சென்னை மாவட்டத்தில் 31.83 சதவீத வாக்காளர்கள் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    மாநில அளவில் ஆதார் இணைப்பு குறித்த பட்டியலில் 38வது கடைசி இடத்தில் சென்னை உள்ளது. அரியலூர் மாவட்டம் 97.12 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கள்ளக்குறிச்சி, தர்மபுரி, நாமக்கல், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

    இதில் 81.88 சதவீத பணி முடிந்து விருதுநகர் மாவட்டம் 6-வது இடத்திலும், 68.06 சதவீதத்துடன் திண்டுக்கல் 21வது இடத்திலும், 66.21 சதவீதத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் 25வது இடத்திலும், 65.85 சதவீதத்துடன் சிவகங்கை 26-வது இடத்திலும், 56.57 சதவீதத்துடன் தேனி மாவட்டம் 31வது இடத்திலும், 54.42 சதவீதத்துடன் மதுரை மாவட்டம் 2வது இடத்திலும் உள்ளது.

    வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்க நாளை முதல் 2 நாட்கள் வீடு வீடாக ஆய்வு பணி நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 17 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆதார் விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்காளர் பட்டியலில் சேரும்போது ஆதார் விபரங்களை அளித்திருந்தாலும் அவை பட்டியலுடன் இணைக்கப்படவில்லை. முகவரி மற்றும் அடையாள சான்றுக்காக மட்டுமே ஆதார் பயன்படுத்தப்பட்டது.

    வாக்காளர்கள் விருப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் விபரங்களை அளித்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படும். இதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

    • சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் ஆதார் எண் இணைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றன.
    • 15-ந்தேதிக்குள் 100 சதவீதம் ஆதார் இணைப்பு பணி முடிய வேண்டும் என்ற இலக்கோடு களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் ஆதார் எண்ணை இணைக்க பொதுமக்கள் தயக்கம் காட்டினர்.

    பின்னர் இதனால் இலவச மின்சாரம் துண்டிக்கப்படாது என்று அரசு சார்பில் விளக்கம் அளித்ததை தொடர்ந்து ஆதாரை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 67 லட்சம் மின் நுகர்வோரின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கு முதலில் டிசம்பர் 31-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் ஆதாரை இணைக்காததால் ஜனவரி 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டதால் பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகங்களிலும், கம்ப்யூட்டர் சென்டரிலும் சென்று ஆதாரை இணைத்தனர். ஆனாலும் 40 லட்சம் பேர் ஆதாரை இணைக்காமல் இருந்தனர்.

    அதனால் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டது. வருகிற 15-ந்தேதியுடன் கால அவகாசம் முடிவடைகிறது. இதற்கு பிறகு மீண்டும் கால நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

    இதையடுத்து மீதமுள்ள மின்நுகர்வோர்கள் ஆதாரை இணைப்பதில் தீவிரம் காட்டினார்கள். 90 சதவீதத்திற்கு மேல் ஆதாரை இணைத்துவிட்ட நிலையில் மின்வாரிய ஊழியர்களும் களத்தில் இறங்கினர். இன்னும் 4 நாட்களே இருப்பதால் வீடுவீடாக சென்று ஆதாரை இணைத்து வருகின்றனர்.

    மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காதவர்கள் பெயர் விவரங்களை சேகரித்து அவர்களின் வீட்டிற்கே சென்று ஆதாரை இணைக்கின்றனர்.

    சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் ஆதார் எண் இணைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றன. சொந்த வீட்டில் வசிப்பதாக இருந்தாலும் அவர்களின் ஆதார் எண்ணை வாங்கி அந்த இடத்திலேயே பதிவு செய்கின்றனர்.

    வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் வீட்டின் உரிமையாளர் செல்போன் எண்ணை வாங்கி அங்கிருந்தவாறே ஆதார் எண்ணை பெற்று மின் ஊழியர்கள் பதிவு செய்கின்றனர். ஒரு வீட்டில் 4, 5, 6 பதிவு மின் இணைப்புகள் இருந்தாலும் அனைத்திற்கும் ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்து இந்த பணியை விரைவாக முடிக்கிறார்கள்.

    15-ந்தேதிக்குள் 100 சதவீதம் ஆதார் இணைப்பு பணி முடிய வேண்டும் என்ற இலக்கோடு களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

    ×